Skip to main content

'இலங்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'-இந்திய வெளியுறவுத்துறை தகவல்!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

'We are keeping a close eye on Sri Lanka' - Indian Ministry of External Affairs informs!

 

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.கோத்தபய ராஜ்பக்சே வெளிநாட்டு தப்பித்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக பல்வேறு நாடுகளிடம் கோத்தபய சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அமீரகம் மட்டுமே அவரது வருகையை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

 

அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் ஜூலை 13 ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் கொண்ட அரசை உருவாக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இலங்கையின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர் கடனுதவி அளித்துள்ளதாகவும், இலங்கையில் நிலவும் கடினமான சூழலை கடக்க முயற்சிக்கும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்