உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் பகுதியில் பெண் ஒருவர், தனது 11 வயது மகனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவில், ஒரு பெண் தனது மகனை அடிப்பைதை மற்றொருவர் அருகில் நின்று அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஹரித்வார் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. மேலும், கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்தால் அந்த பெண்ணின் கணவர், அவரிடம் அடிக்கடி தகராறிடம் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கடையை நடத்தி கொண்டு அங்கேயே இருந்து சில மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. இதனால், மனமுடைந்த அந்த பெண், தனது கணவரை பயமுறுத்துவதற்காக தனது மகனை அடித்து அதை, தனது மூத்த மகனிடம் வீடியோவாக எடுக்கச் சொல்லி அந்த வீடியோவை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர், அந்த பெண்ணின் பக்கத்து வீட்டார் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் தனது குழந்தைகளை நன்றாக கவனித்து வருவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, மகனை அடித்து வீடியோவாக எடுத்த அந்த பெண்ணுக்கு பல கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், கணவர் மீது பெண் கூறிய புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.