
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று (27.04.2021) நடைபெற்றது. அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அதிக அளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 150 மாவட்டங்களில் (கரோனா உறுதியாகும் சதவீதம் 15% ஆக இருக்கும் மாவட்டங்களில்) முழு ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும், மாநில அரசுகளோடு ஆலோசித்த பிறகே மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பரிந்துரைகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றாலும், தீவிரமாக பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த விரைவில் இந்தப் பரிந்துரை அமலுக்கு வரலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.