டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று (23/04/2021) காலை 10.00 மணிக்கு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனையின்போது, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக, 'மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பில், "பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். ரூபாய் 26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.