கரோனாவால் ஏற்படும் சவாலைச் சமாளிக்கத் தயாராக இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,86,406 ஆக உயர்ந்த நிலையில், இதில் 1,02,393 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் அதிகபட்சமாக 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சீனாவில் 3,277 பேரும், ஸ்பெயினில் 2,311 பேரும், ஈரானில் 1,812 பேரும், அமெரிக்காவில் 582 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையிலும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை எட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அனைத்து மாநிலங்களும் உடனடியாக கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையாக்கும் வகையில் சரியான மருத்துவமனைகளை அடையாளம் கண்டு தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பாதிக்காட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்த மருத்துவமனைகள் அனைத்தும் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என் தெரிவித்துள்ளார்.