
டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்து அகற்றிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மர்மமான டிபன் பாக்ஸ் ஒன்று கற்குவியலுக்கு இடையே கிடந்தது. அது ஏதேனும் வெடிக்கும் பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழ, இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த டிபன் பாக்ஸை சோதனை கருவிகளை வைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. ராணுவ முகாம் அருகேயே டிபன் பாக்ஸில் இருந்த அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை பறிமுதல் செய்த வெடிகுண்டு நிபுணர்கள், ஆளில்லாத இடத்தில் வைத்து அதை வெடிக்க வைத்து செயல் இழக்கச் செய்தனர்.