ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் ஜி.எஸ்.டி வரி வசூலாகியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் தொழில்கள் வளர்ச்சியடைந்திருக்கத்தானே வேண்டும். ஆனால், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலிருந்தே வேறுவிதமான குரல்கள் கேட்கின்றன. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ஜவுளித் தொழிலின் கண்ணையே குத்திவிட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றன.
குஜராத்தின் சூரத் பகுதி ஜவுளித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. ஜி.எஸ்.டி.க்குப் பிறகுமட்டும் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயிருப்பதாக அறிவித்துள்ளது சூரத் ஜவுளி வியாபாரிகள் அமைப்பு.
நாளொன்றுக்கு 4 கோடி மீட்டர் ஜவுளிகளை உற்பத்தி செய்துகொண்டிருந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜி.எஸ்.டி.க்குப் பிறகு 2.5 கோடி மீட்டர் ஜவுளிகளைத்தான் உற்பத்தி செய்கிறார்களாம். கிட்டத்தட்ட 1.5 கோடி மீட்டர் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தவிரவும் நாளொன்றுக்கு 13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிக்கொண்டிருந்த இத்துறையில், 30 லிருந்து 35 சதவிகித வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான நபர்களின் ஊதியம் குறைந்துள்ளது.
பணமதிப்பிழப்பும் ஜி.எஸ்.டி.யும் ஜவுளி உற்பத்தியில் 40 சதவிகித வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளன குஜராத் ஜவுளி வியாபாரிகள் அமைப்பின் செயலாளரான சம்பாலால். ஜவுளித்தொழிலோடு தொடர்புடைய எம்பிராய்டரி, விசைத்தறி தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
சூரத்தின் ஜவுளி ஏற்றுமதி கடந்த ஓராண்டாகவே சரிவுப் பாதையில் இறங்கியிருக்கிறது. ஜி.எஸ்.டியில் திருப்பியளிக்கப்படும் தொகை, சரியான சமயத்தில் திருப்பித் தரப்படாததால் பல்வேறு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாகியுள்ளதாக வியாபாரிகள் குமுறுகின்றனர். ஜி.எஸ்.டி.க்குப் பின் கிட்டத்தட்ட இந்த ஏற்றுமதி சரிவு விகிதம் 60% என்கிறார்கள். ஜவுளி சீஸனான இந்தச் சமயத்திலும் பெரும்பாலான கம்பெனிகளில் ஒரேயொரு ஷிப்ட்தான் நடக்கிறது. இனிமேலும் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளும், நிவாரணங்களும் அளிக்கவில்லை என்றால் ஜவுளித் தொழில் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடும் என்கிறார்கள் சூரத் வியாபாரிகள்.