இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று (28.04.2021) காலை 7.51 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் தெக்கியாஜுலி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்ததாகவும், சுவர்களில் தெறிப்புகள் ஏற்பட்டு சேதமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் யாரும் காயமடைந்ததாகவோ, உயிரிழந்ததாகவோ எந்த தகவலும் இல்லை. அசாமில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அண்டை நாடான பூட்டானிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள மக்கள், நில அதிர்வினால் வீட்டைவிட்டு வேகமாக வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக அசாம் மாநில முதல்வரோடு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் அசாம் மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.