
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்ஃப் உசேன் (28). இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் ராம்பூர் காவல்நிலையத்தில் இருக்கின்றன. இதையடுத்து, இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முகமது ஷாகிம் (30) என்பவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆரிஃப் உசேனை கைது செய்தனர். இதையடுத்து, இவர் கடந்த 2 வருடமாக சிறையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் ஜாமீன் பெற்று தனது உறவினர் நடத்திய விருந்தில் பங்கேற்பதற்காக நேற்று (13-11-23) பிலாஸ்பூர் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற அவரை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பிலாஸ்பூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆரிஃப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச போலீஸார் தரப்பு தெரிவிக்கையில், “முகமது ஷாகிம் போலீஸ் இன்பார்மராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் முகமது ஆரிஃப்பின் குற்றச்செயல்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஷாகிமை அவரது காரில் வைத்து ஆரிஃப் மற்றும் சில நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனால், ஆரிஃப் மீது குண்டர் சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் உறவினர் வீட்டு விருந்துக்கு சென்ற போது முகமது ஷாகிம்மின் உறவினர் ஒருவர் ஆரிஃப்பை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை” என்று கூறினர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.