Skip to main content

பதிண்டாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் இருவர் தமிழர்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

 Bathinda issue Two of the soldiers who were Tamils...

 

பஞ்சாப் மாநிலம், பதிண்டா எனும் பகுதியில் இந்திய இராணுவ முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் நேற்று அதிகாலை சாதாரண உடையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு இராணுவ வீரர்கள் பலியாகினர். 

 

இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு நடைபெற்று நான்கு வீரர்கள் பலியானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே இராணுவ முகாம் பகுதியை இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து இராணுவமும் பஞ்சாப் போலீஸும் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர். 

 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் போலீஸ் தரப்பில், ‘பதிண்டாவில் உள்ள ராணுவ முகாம் வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன. சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்கள் கொண்ட இன்சாஸ் துப்பாக்கி ஒன்று காணாமல் போயிருந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத செயல்பாடுகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை’ எனச் சொல்லப்படுகிறது. 

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், இரண்டு ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி, பெரிய வனவாசி அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் நெசவுத் தொழிலாளியாக உள்ளார். அவரது மகன் கமலேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார். திருமணம் ஆகாத கமலேஷ் ஒன்றரை மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முகாமில் தங்கி இருந்து நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரழந்த 4 ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கமலேஷ் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதேபோல் இத்தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு ராணுவ வீரர் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் லோகேஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்