மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், "கரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாகக் கவனித்து வருகிறது. கரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாகத் தயாராக உள்ளது. பொருளாதார இழப்புகள் தொடர்பாகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளோம். வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.
கரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப்பெரிய பொருளாதாரச் சவாலாக உள்ளது. கரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். கரோனாவால் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக ஆர்பிஐ, வங்கிகளுக்கு போதிய ரூபாய் நோட்டுகளைத் தந்துள்ளது.
2021- 22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எப் கணித்து உள்ளது; இது ஜி-20 நாடுகளில் அதிகம். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையத்தள பயன்பாடு மற்றும் இணையத்தள பணப்பரிமாற்றத் தேவை அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 4%லிருந்து 3.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம். வங்கிகள் தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.40 ஆக தொடரும்." இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசினார்.