தெ.சு.கவுதமன்
ராகுல் காந்தி எம்.பி.யின் பாரத ஒற்றுமை நடைப்பயணம் நூறாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை தனது பயணத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார் இந்த நேருவின் கொள்ளுப்பேரன். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரையிலான 3570 கி.மீ தூரத்தில், இதுவரை 2800 கி.மீக்கும் அதிகமான தூரத்தை நிறைவு செய்துள்ளார். வரவுள்ள 50 நாட்களில் இன்னும் 737 கி.மீ. தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த 100 நாட்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் என 8 மாநிலங்களில், அவற்றிலுள்ள 42 மாவட்டங்களின் வழியே கடந்துள்ளார். இனி ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், இறுதியாக ஜம்மு காஷ்மீர் சென்று நிறைவடையவுள்ளது.
வேலைவாய்ப்பின்மை காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, தவறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே அரசியல் பிளவு விரிவடைவது, அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வது, புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தவறுகளைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைப்பயணத்தின் செயல்பாடுகள் வகுக்கப்பட்டன.
இந்த நடைப்பயணத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது. எளிய பாமர மக்களில் இருந்து பிரபலங்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரோடு கரம் கோர்த்து நடந்து சென்றதைக் காண முடிந்தது. முன்பெல்லாம் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் தங்களது பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு பொதுமக்களை நோக்கி வரும்போது அவர்கள் மத்தியில் எழக்கூடிய உற்சாகத்தை ராகுல் காந்தியின் நடைப் பயணத்தில் கலந்து கொண்ட, வரவேற்பளித்த பொதுமக்கள் மத்தியில் காண முடிந்தது.
இந்த நடைப்பயணமானது, இந்தியா முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு தங்கள் கட்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததோடு, ராகுல் காந்தியின் அரசியல் மீதும் நம்பிக்கையை உயர்த்துவதாக இருந்தது. இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சித் தலைமையின் மீது விரக்தியோ அல்லது ஏமாற்றமோ உணரத் தொடங்கியிருந்த கட்சித் தொண்டர்கள் பலரும், மீண்டும் தங்கள் கட்சியினை நம்பத் தொடங்கியுள்ளனர். இந்த நடைப் பயணத்தின் மிகப்பெரிய மாற்றமாக இதனைப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியை கேலிக்குரிய மனிதராகவும், பரம்பரை பணக்கார வீட்டில் பிறந்த செல்வச் சீமானாகவும் காட்டப்பட்ட அரசியல் நையாண்டியை உடைத்து, தன்னை எளிய மனிதராகக் காட்டிக் கொள்வதில் 100% வெற்றி பெற்றுள்ளார் என்பது இந்த 100 நாட்களில் தெரிய வந்துள்ளது. இதுவும் நடைப் பயணத்தின் சாதனையே! இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அடி விழுந்திருந்தபோதும், இந்தியா முழுக்க ஓரளவு எழுச்சியை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாதது!