Skip to main content

“இந்திய நாட்டில் பாகுபாடும் வன்முறையும் அதிகரித்து வருகிறது”- ஐரோப்பாவில் ராகுல் தாக்கு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Rahul Gandhi spoke in Europe about India and Prime Minister narendra Modi

 

இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும்(9.9.2023), நாளையும்(10.9.2023) நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு வார காலம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ராகுல் காந்தி வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று, பெல்ஜியம், பிரஸல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போக்கில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளும் என நான் நினைக்கிறேன். மேலும், நாம் ரஷ்யா நாட்டுடன் தொடர்பு வைத்துள்ளோம். அதனால், தற்போதைய அரசு முன்வைத்துள்ள நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்காது எனவும் நினைக்கிறேன்.

 

ஒருங்கிணைந்த சூழல் மூலம் உற்பத்தியை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பதை சீனர்கள் நிரூபித்துவிட்டனர். நீங்கள் எப்போது மக்களுக்கான சுதந்திரம் அளிக்கவில்லையோ, அந்த இடத்தில் அவர்களின் அரசியல் சுதந்திரத்தை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். ஆனால், நீங்களே அவர்களுக்கு செழிப்பை தருகிறீர்கள். ஜனநாயக அடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்துடன் சேர்த்து ஒரு மாற்று பார்வையை வழங்குவற்கும் உற்பத்தி செய்வதும் எங்களுக்கு சவாலாக இருக்கிறது. இதுபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா நாடுகள் இடையே நிறைய ஒத்துழைப்புகள் மேற்கொள்வதில் நமது கவனம் இருக்க வேண்டும்.  பின், நம்மால் எப்படி சீனாவின் உற்பத்தி மாதிரிக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டித்தன்மையான பார்வை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பேசிய ராகுல் காந்தி, “பெல்ஜியமில் உள்ள இந்தியாவின் புலம்பெயர் மக்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும். அவர்கள் பெல்ஜியமில் எப்படி இயங்கி வருகிறார்கள் என்பதனை புரிந்துகொள்வது இந்த பயணத்தின் நோக்கம். அடுத்ததாக, இங்குள்ள அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, இந்தியாவை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள். மேலும், நமது இரு நாடுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வந்துள்ளேன். இந்திய நாட்டில் பாகுபாடும் வன்முறையும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் சிறுபான்மையினர், தலித் சமூகங்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்” என விமர்சித்தார்.

 

பின்னர் ராகுல் காந்தியிடம், ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை அழைக்கவில்லையே என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது, “இதில் முரண்பட என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை அழைக்கப் போவதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல் நமக்கு சொல்ல வருவது, இந்தியாவின் 60 சதவீத மக்கள் தொகையின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை என்பதே ஆகும். இதுபோன்ற செயல்களை ஏன் இவர்கள் செய்கிறார்கள். இதற்கான தேவை என்ன என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

 

தொடர்ந்து, பாரத் பெயர் மாற்றம் குறித்தும் கேள்விக்கு, “எங்கள் அரசியலமைப்பில் இருக்கும் பெயரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதில், 'இந்தியா, அதுவே பாரதம்' என உள்ளது. அதுவே எனக்கு சரியாகப்படுகிறது. நாங்கள் எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்ததற்கு காரணம், அது எங்களின் கூட்டணியின் சிந்தனையை பிரதிபலிக்கிறது. எங்களை நாங்கள் இந்தியாவின் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், நாட்டின் பெயரையே மாற்ற நினைக்கும் அளவுக்கு, பிரதமரை இந்த பெயர் கலங்கடித்துவிட்டது. மேலும், நான் ஒவ்வொரு முறையும் அதானி மற்றும் சலுகை சார்ந்த முதலாளித்துவ பிரச்சினையை எழுப்புகிறோம். ஆனால், பிரதமர் அதிரடியாக அதனைத் திசை திருப்புவது போன்று வெளிப்படுவது என்பதும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது” என்றார்.

 

மேலும், இந்தியாவில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன” என்றார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி அடுத்தாக பாரீஸ் சென்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்