ஜோதிராதித்ய சிந்தியாவைத் தனது கல்லூரி காலத்திலிருந்து தெரியும் என்றும், அவர் அரசியல் எதிர்காலத்திற்காகத் தனது அடிப்படை சித்தாந்தத்தையே மாற்றிவிட்டார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த அவருக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டும் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா குறித்து செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "இது இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை. ஒருபுறம் காங்கிரஸ் மற்றொரு பக்கம் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஜோதிராதித்யா சிந்தியாவின் சித்தாந்தம் எனக்குத் தெரியும். கல்லூரி காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தைக் கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பக்கம் சென்றுள்ளார்" எனத் தெரிவித்தார்.