உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே(வயது63) இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது, அந்த பொறுப்புக்கு ஒருவரை பரிந்துரை செய்வது மரபு. அந்த வகையில் மூத்த நீதிபதியாக உள்ள பாப்டேவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். அதன்படி 47-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ பாப்டே இன்று பதவியேற்றார். இன்று பதவியேற்றுக்கொண்ட எஸ்.ஏ.பாப்டே 17 மாத காலம் பதவியில் நீடிப்பார். 23.4.2021 அன்றுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது.
24.4.1956ல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்த நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் எல்.எல்.பி பட்டங்களை முடித்தார். 1978ல் அவர் மகாராஷ்டிராவின் பார் கவுன்சில் வழக்கறிஞராக சேர்ந்தார். மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து, 1998ல் மூத்த வழக்கறிஞராக திகழ்ந்தார். பின்னர் 2000ல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2012ல் மத்திய பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.