கரோனாவிற்கு பிறகு உலகத்தை அடுத்தபடியாக அச்சுறுத்தி வருகிறது குரங்கு அம்மை எனும் நோய். பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்பொழுது டெல்லியில் 31 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. தற்பொழுது வரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.