Skip to main content

சந்திரபாபு நாயுடுவிடம் அதிகாரிகள் விசாரணை

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Officials interrogating Chandrababu Naidu

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த 10 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர், சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதுமட்டுமின்றி சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  வழங்கப்பட்ட தீர்ப்பில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ராஜமகேந்திரவரம் சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார்.

 

மேலும் நேற்றுடன் அவரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணையின் போது நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு காணொளி காட்சி மூலம் ஆஜரானர். அப்போது, தான் செய்யாத குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்டார். அதற்கு நீதிபதி, நீங்கள் நீதிமன்றக் காவலில் தான் உள்ளீர்கள். போலீஸ் காவலில் இல்லை என்றும் தெரிவித்தார். அதே சமயம் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் சிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ராஜமுந்திரி சிறையில் 9 பேர் கொண்ட குழுவினர் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையின் போது, பணம் கைமாறியது தொடர்பாக சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விசாரணை நாளையும் தொடரும் எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்