ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பரவலைத் தடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர்கள், மாநில முதல்வர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து தரப்பினரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
இந்த நிலையில் நாளை மறுநாள் (11.04.2020) காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தில் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒடிஷா மாநிலத்தில் ஜூன் 17- ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ரயில், விமான சேவையை நீட்டிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு ஒடிஷா முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை முதல் மாநிலமாக ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது ஒடிஷா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.