உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் வனப்பகுதியையொட்டியுள்ளது பாக்பத் என்ற கிராமம். வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கிராமத்தை சுற்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வலம் வருவது வழக்கம். அவற்றிற்கு அந்த கிராம மக்கள் அவ்வப்போது உணவுகள் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாக்பத் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியிடம் மிட்டாய் தருவதாகக் கூறி அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் பழைய கட்டிடத்திற்குள் திடீரென வந்த குரங்குகள், சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரின் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் அச்சமடைந்த அந்த இளைஞர் தலைதெறிக்கத் தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய சிறுமி, வீட்டிற்குச் சென்று தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர்.
இந்த சூழலில் மனிதன் மிருகமாக மாறிய நேரத்தில் மிருகம் மனிதநேயத்துடன் செயல்பட்டு சிறுமிக்கு நேர இருந்த கொடூரத்தைத் தடுத்துள்ளது அக்கிராமத்தினரையும் தாண்டி பலரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.