மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த மாநில சட்டப்பேரவை 231 எம்.எல்.ஏக்களை கொண்டது. அதில் பாஜகவுக்கு 109 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
அந்த மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். இந்நிலையில் கர்நாடகவில் காங்கிரஸ் கூட்டணி, குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது போல், மத்திய பிரதேச மாநிலத்திலும் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில பாஜக தலைவருமான சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி கலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர் கமல்நாத் மாநில சட்டப்பேரவையில் தங்களுக்கு 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை விடுத்தால், பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். கர்நாடகாவில் சுயேச்சை எம்.எல்.ஏக்கள், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டிய நிலையில்,மத்திய பிரதேசத்தை பாஜக குறி வைத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கட்சியின் அதிரடி வியூகத்தால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.