கேரள, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி. இவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு இருந்ததையடுத்து, அவர் கைது செய்யபட்டு, கோர்ட் உத்தரவுப்படி பெங்களூரு அமலாக்கத் துறையின் கஸ்டடியில் விசாரணையில் இருந்து வருகிறார். அதேசமயம் திருவனந்தபுரம் மருதங்குழியில் உள்ள பினீஷின், வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பினீஷின் மனைவி ரினிட்டா, இரண்டரை வயது குழந்தை மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் அவ்வீட்டில் இருந்தனர். பினீஷின் பெற்றோரான தந்தை கொடியேறி பாலகிருஷ்ணன், தாயார் வினோதினி, ஏ.கே.ஜி சென்டரில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர். மேலும், பினீஷின் வீட்டில், இரவு பகலாக நடந்த சோதனையில், பல ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் பினீஷ் போதைப் பொருள் கடத்தல் மற்றும் இண்டர்நேஷனல் கும்பலிடம் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கிரெடிட் கார்டு, போதைப் பொருள் கடத்தல் மாஃபியா தலைவன் அனூப் முகமதுனுடையது.
அந்த கார்டின் கணக்கு, சமீபத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கார்டை பினீஷ்தான் பயன்படுத்தி வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கார்டு குறித்து பினீஷ் மனைவியிடம் கையெழுத்து வாங்க அமலாக்கத் துறையினா் முயன்றபோது, கையெழுத்துப் போட அவர் மறுத்து விட்டார். மேலும், பினீஷ் மற்றும் அவரது மனைவி ரினிட்டாவின் உறவினர்கள் ஆகியோர் சோதனை நடந்த வீட்டின் முன் குவிந்தனர். இதனால் அமலாக்கத் துறையினர் வீட்டை சீல் வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும், ஆளும் கட்சியின் செயலாளர் மகன் வீடு என்பதால் சீல் வைக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.
இந்த நிலையில், பினீஷ் இந்த வீட்டை கேரள முன்னாள் டி.ஜி.பி.யான ராஜீவனிடமிருந்து மிரட்டி வாங்கியதாக அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. 2010-11ல் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ராஜீவன் அந்த வீட்டை பினீஷுக்கு விற்பதாகப் பேசி, ரூ.50 லட்சம் முதலில் அட்வான்ஸாக, பினீஷ் கொடுத்தார். மீதி ஓன்றரை கோடி ரூபாயை பினீஷ் கொடுக்காமல், டி.ஜி.பி ராஜீவனை மிரட்டி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, வீட்டை தன்னுடைய மனைவி பெயரில் மாற்றியிருக்கிறார்.
இதில் எவ்வளவோ போராடியும், டி.ஜி.பி ராஜீவனால் வீட்டை மீட்க முடியாமல், கடைசியில் மாரடைப்பால் இறந்து போனதாக, அமலாக்கப் பிரிவினா் கூறியுள்ளனர். இந்த விஷயமும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பினீஷ் வீட்டை மிரட்டி வாங்கியதின் பின்னணியில் கொடியேறி பாலகிருஷ்ணனும் உள்ளார் எனக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.