



கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 86 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் கேரள மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இன்று (14/03/2021) வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 112 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். அதன்படி, கனிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. அல்போன்ஸ், திருச்சூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி, இரிக்கூர் சட்டமன்றத் தொகுதியில் அனியம்மா ராஜேந்திரன், பேராவூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்மிதா ஜெயமோகன், கோழிக்கோடு (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் நவ்யா ஹரிதாஸ், கொண்டோட்டி சட்டமன்றத் தொகுதியில் ஷீபா உன்னிகிருஷ்ணன், குருவாயூர் சட்டமன்றத் தொகுதியில் நிவேதிதா, எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் பத்மஜா, குன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதியில் ரேணு சுரேஷ், உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதியில் ரம்யா ரவீந்திரன், கோட்டயம் சட்டமன்றத் தொகுதியில் மினர்வா மோகன் உள்ளிட்ட 112 பேர் போட்டியிடுகின்றனர்.
கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், கேரளா மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.