கர்நாடகா மாநிலத்தின் நான்காவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பெங்களுருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பதவியேற்புக்கு பின் பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, ஜூலை 29 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காலை 10.00 மணியளவில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஜூலை 31 ஆம் தேதி காலக்கெடு நிர்ணயித்த நிலையில், முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கர்நாடக அமைச்சரவை குறித்து பாஜகவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அதே போல் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபித்தவுடன், நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறினார். கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. இதில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு 100 உறுப்பினர்களும், அதிருப்தி உறுப்பினர்கள் 14 பெரும், மூன்று பேர் தகுதி நீக்கம், இரண்டு சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.