ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜ்வாலா குட்டா, "எதிர்காலத்தில் கற்பழிக்கும் எண்ணம் வருவோரை இது தடுத்து நிறுத்துமா ?? மற்றும் ஒரு முக்கியமான கேள்வி... அனைத்து பாலியல் குற்றவாளிகளும் அவர்களின் சமூக நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக நடத்தப்படுவார்களா ...?" என கேள்வியெழுப்பியுள்ளார். அவரது இந்த ட்வீட்டை பார்த்த பலரும், சமூக பாகுபாடு இன்றி அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.