ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் 25000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கித்தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர். அது மட்டுமல்லாமல் விமான ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத ஊதியத்தை வழங்காததால், ஊழியர்கள் டெல்லி மற்றும் மும்பையில் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையை சமாளிக்க அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனம் 49 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 26 சதவீதமும் என 75 சதவீதம் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.