இந்திய வணிக வரலாற்றிலேயே முதன்முறையாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை மெல்லத் திரும்பிவரும் சூழலில், இந்திய பங்குச்சந்தையும் குறிப்பிடத்தகுந்த அளவு ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. இதில் இன்று காலை வணிகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் மிகப்பெரிய ஏற்றத்தைச் சந்தித்தன.
ஃப்யூச்சர் குழுமத்தின் சில்லறை சொத்துக்களை வாங்குவதற்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின், 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி ஒப்புதல் அளித்ததையடுத்து, இன்று காலை முதலே ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டன. இதன் பலனாக சென்செக்ஸ் மதிப்பு முதன்முறையாக 50,126.73 -ஐ எட்டியது, அதேபோல நிஃப்டி 50 குறியீடும் முதல் முறையாக 14,700 புள்ளிகளைக் கடந்தது. ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை உயர்வு மட்டுமின்றி, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.