இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதுடன், தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த கரோனா அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என கருதப்படும் நிலையில், தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்கள், தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்காக உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதத்தையும், மத்திய அரசின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை செயல்படுத்தும் விதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி, இன்று மீண்டும் மத்திய அரசின் தடுப்பூசி யுக்தியை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், இந்திய அரசின் அபாயகரமான தடுப்பூசி யுக்தி, பேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் அலை ஏற்படுவதை உறுதி செய்யும். எத்தனை முறை சொன்னாலும் போதாது இந்தியாவிற்கு சரியான தடுப்பூசி திட்டம் தேவை.