தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக திட்டங்கள் குறித்த அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லியில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து இந்த திட்டத்திற்கான இறுதிகட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம், சட்டங்கள் ஆகியவை தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கின்றன. கரோனா வர்த்தக நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும் இன்று வெளியாகின்றன.
இதுதொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது ," மத்திய, மாநில அரசுகளுடன் உணவு கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும். ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு சேர்த்த மாநில அரசுகளை பாராட்டுகிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாக உதவி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது..
8.19 கோடி விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு உள்ள 20 கோடி பெண்களுக்கு 10025 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 85% கட்டணத்தை மத்திய அரசே ஏற்கிறது" என்றார்.