Skip to main content

'சாட்சிகளைக் கலைக்கக் கூடாது'-ரேவண்ணாவிற்கு ஜாமீன்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
nn

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் பிரஜ்வால் ரேவண்ணாவின் தந்தையும், தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு  எச்.டி.ரேவண்ணாவை அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு ரேவண்ணாவிற்கு ஜாமின் வழங்கியுள்ளது கர்நாடக நீதிமன்றம். சாட்சியங்களைக் கலைக்க முயற்சிக்க கூடாது என்று ரேவண்ணாவிற்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு  குழுவின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும்,  5 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறலாம் எனவும்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரஜ்வால் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்தப் புகாரில், ‘எனது தாயார் எச்.டி.ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வந்தார். எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரால் எனது தாயார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.  பிரஜ்வல் எனக்கு போன் செய்து எனது ஆடைகளை கழற்றச் சொல்வார். என் அம்மாவின் மொபைலில் அழைத்து வீடியோ கால்களுக்கு பதில் சொல்லும்படி வற்புறுத்துவார். நான் மறுத்ததால், எனக்கும், என் அம்மாவுக்கும் தீங்கு விளைவிப்பதாக மிரட்டினார்.

எனது தாயார் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். எச்.டி.ரேவண்ணாவாலும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். என் அம்மா ஒத்துழைக்காவிட்டால் கணவரின் வேலையை பறித்துவிடுவேன், மகளை பலாத்காரம் செய்துவிடுவேன் என்று பிரஜ்வால் மிரட்டி வந்தார். என் அம்மா நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு மட்டுமே எங்களை அழைத்து பேசுவார். அவர் எங்களுடன் பேசுவது அரிது. அவர்கள் என் தாயை அடிமை போல் நடத்தினர்’ எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்