கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 116 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை 7 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் வைரஸ் தொற்று குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கரோனா வைரசுக்குப் பலியாகியுள்ளார். இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
திரையரங்கங்கள் போன்ற பொழுதுபோக்கு தளங்களும் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சோடியா, உயர் அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் டெல்லியில் உள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்கள், இரவு விடுதி ஆகியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மதரீதியான கூட்டம், கலாச்சார ரீதியான கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு போராட்டம் நடத்துபவர்களுக்கும் பொருந்தும். அதேபோல திருமண விழாக்களையும் முடிந்தால் தள்ளி வையுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.