மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட மாணவனை போலீசார் ஒருவர் சிபிஆர் டிரீட்மென்ட் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பொழிந்துவரும் நிலையில் செகந்திராபாத்தின் மறேடபள்ளி என்ற இடத்தில் ராகேஷ் என்ற மாணவன் ஒருவன் மின்கம்பத்தில் கசிந்த மின்சாரத்தில் சிக்கி தூக்கிவீசப்பட்டான். சுருண்டு விழுந்த ராகேஷை அங்கு பணியில் இருந்த காவலர் அப்துல் கதீர் காப்பாற்ற முயற்சி செய்தார். அதன்படி சிபிஆர் எனும் முறைப்படி மார்புக்கூட்டை அழுத்தி செயலிழந்த இதயத்தை துடிக்கவைக்க முயற்சி செய்தார். தீவிர முயற்சியின் பலனாக மாணவன் மூச்சு விட்டான். உடனடியாக மாணவன் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் பேருந்து நடத்துநர் ஒருவர் குரங்கு ஒன்றிற்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றியது தொடர்பான வீடியோ வைரலானது குறிப்பிடத்தகுந்தது.