இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சர்வதேச நாடுகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றை அளித்து இந்தியாவிற்கு உதவி வருகின்றன.
இந்தியாவில் கரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருவதற்கு, மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (10.05.2021) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, இந்தியாவிற்கு உதவிய சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "மோடி அரசு தடுப்பூசி செலுத்த வேண்டிய தனது பொறுப்பைக் கை விட்டுவிட்டு, அதனை மாநிலங்களுக்கு அளித்துவிட்டது. பொருளாதார ரீதியாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவது மத்திய அரசுக்கு சுமுகமாக இருந்திருக்கும். கடந்த 4 வாரங்களில் கரோனா நிலைமை இன்னும் பேரழிவாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் தோல்விகள் இன்னும் வெளிப்படையாக தெரிகிறது. அறிவியல் ரீதியிலான ஆலோசனைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளன. மோடி அரசு தொற்றுநோயை அலட்சியப்படுத்தியதால் நாடே ஒரு மோசமான விலையை அளித்துவருகிறது” என கூறினார்.
மேலும் அவர், சர்வதேச சமூகம் நமது உதவிக்கு விரைந்தது. காங்கிரஸ் சார்பாக, எங்களுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாம் இத்தகைய நிலைமையில் இருப்பது, நமது ஆளும் அரசின் பெரும் ஆணவம், திறமையின்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது" என கூறியுள்ளார்.