சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 6.50 லட்சம் ரேபிட் சோதனை கிட்டுகள் கொண்டுவரப்பட உள்ளன.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் வகையில் இந்தியாவுக்குச் சீனாவிலிருந்து 6.5 லட்சம் ரேபிட் சோதனை கிட்டுகள் இந்தியா வரவுள்ளன. இந்தக் கிட்டுகளுடன் சீனாவிலிருந்து விமானம் இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிட்டுகள் இந்தியா வந்தடைந்த பின்னர் மாநிலங்களுக்கு அவை பிரித்துக்கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.