பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.
இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து, கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி என்பவர் பஞ்சாபின் புதிய முதல்வராக்கப்பட்டார்.
இதனையடுத்து, கேப்டன் அமரீந்தர் சிங் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் அவர் பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் நேற்று (30.09.2021), தான் காங்கிரஸில் தொடரப்போவதில்லை என தெரிவித்த அமரீந்தர் சிங், பாஜகவிலும் இணையப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனால் கேப்டன் அமரீந்தர் சிங்கின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அவர் 15 நாட்களுக்குள் வெளியிடுவார் எனவும், பல பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியில் இணையவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியில் இணைந்தால் அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சிக்கலாக அமையும் என கருதப்படுகிறது.
மேலும் கேப்டன் அமரீந்தர் சிங், சில விவசாய சங்கத் தலைவர்களையும் தனது கட்சியில் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.