கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை எவ்வாறு கையாளுவது என்ற வழிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்களின் உடல் மூலமும் கரோனா பரவலாம் என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனால், டெல்லியில் கரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலைத் தகனம் செய்வதில் குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “கோவிட்-19 வைரஸ் எச்சில் மூலமாகத்தான் பரவுகிறது. எபோலா, நிப வைரஸ் போல உயிரிழந்தவர்களின் உடல் மூலமாக கோவிட்-19 வைரஸ் பரவாது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் உடலை எவ்வாறு கையாளுவது என டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லது பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் உடலைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் போது பிரத்தியேக கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து இருமல் மற்றும் தும்மும் போது வெளிப்படும் எச்சில் மூலம்தான் பரவுவதாகவும், இதனால், பாதிக்கப்பட்ட நபரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும்போது பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை விடக் கூடுதல் கவனம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.