ஆடிட்டர் பணிக்கான சி.ஏ தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் வகையில் புதிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என கூறி நாடு முழுவதிலும் சி.ஏ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான போது சரியாக பதிலளித்த மாணவர்கள் பலர், தவறான மதிப்பிடல் காரணமாக தேர்ச்சி பெறாத சூழலுக்கு தள்ளப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் சி.ஏ தேர்வில் மறு மதிப்பீட்டு முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுகூடி, தேர்வினை நடத்தும் ஐசிஏஐ அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும், விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் தவறாக மதிப்பெண் அளித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடந்தது. இந்தநிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை அடுத்து வரும் தேர்வுகளின் போது நிறைவேற்றுவதாக ஐசிஏஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற தவறான விடைத்தாள் மதிப்பீட்டால் தேர்ச்சி பெறாதவர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.