![bus tragedy in Jammu and Kashmir Akhnoor](http://image.nakkheeran.in/cdn/farfuture/eWhbQaio66wrxEQVAEcZHUf0WFDHqe2kkHPEPiWdPcE/1717084581/sites/default/files/inline-images/jk-bus-art.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் இருந்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தப் பேருந்து ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அங்குள்ளவர்கள் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர், இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த 21 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஜம்மு கோட்ட ஆணையர் ரமேஷ் குமார் கூறுகையில், “பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
![bus tragedy in Jammu and Kashmir Akhnoor](http://image.nakkheeran.in/cdn/farfuture/KvWS_elwRidoialpRdJKWPLdpm3a3eDHlzCDlywsWq0/1717084647/sites/default/files/inline-images/murmu-file-1_0.jpg)
அதே சமயம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு அருகே அக்னூரில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்தவர்கள் உயிர் இழந்தது சொல்ல முடியாத வேதனை அளித்தது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தவர்கள் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
![bus tragedy in Jammu and Kashmir Akhnoor](http://image.nakkheeran.in/cdn/farfuture/IOKLUzjHOsXm6f_tbivGgc5dVnSi_bjyqZSiAvXz2yI/1717084671/sites/default/files/inline-images/mallikarjuna-khargrey-art-1.jpg)
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பேருந்து விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துகிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இந்த துயர நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.