ஆந்திர மாநிலத்தில் நடந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிப் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் டெல்லியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர்களான நான்கு ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவிற்கு செல்ல தயாராகிவிட்டனர்.
முதல் கட்டமாக ராஜ்யசபா எம்.பிக்களான சுஜானா சவுத்ரி, சி.எம். ரமேஷ், ஜி. மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. இவர்கள் 4 பேரும் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசி பாஜக கட்சியில் இணைய தயாராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் சுஜானா சவுத்ரி மீது அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 4 பேரும் இன்று துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவையும் நேரில் சந்தித்து ராஜ்யசபாவில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்கக் கோரி மனு அளிக்க உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதேபோல் எம்.எல்.ஏக்களும் கட்சி தாவினால் தெலுங்குதேசம் கட்சியே இரண்டாக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகனும் பொதுச்செயலாளருமான லோகேஷுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததில் கட்சியின் மூத்த தலைவர்கள். எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் பாஜக கட்சி காலூன்ற தேவையான நடவடிக்கைளை அக்கட்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு மொத்தம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், நான்கு எம்பிக்கள் பாஜக கட்சிக்கு தாவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.