கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் போட்டியிடவுள்ளது. கர்நாடகத் தேர்தலில் முன்னதாக கூட்டணியில் அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு போட்டியிட வேண்டாம் கூட்டணிக்கு ஆதரவு மட்டும் அளித்தால் போதும் என்று பாஜக தலைமை கூறிவிட்டதாகத் தகவல் கசிந்தது. இந்த நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக கர்நாடகத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகுதியில் ஏற்கனவே பாஜக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
சமீப காலமாக அதிமுக - பாஜக நிர்வாகிகள் கூட்டணி குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட்டணி தொடரும் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது கர்நாடகத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக தனித்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது, தமிழகத்தில் கூட்டணி முறிவுக்கான தொடக்கம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 2023 - கழக வேட்பாளர் அறிவிப்பு.#KarnatakaAssemblyElections2023 pic.twitter.com/OVJgh7J8me— AIADMK (@AIADMKOfficial) April 19, 2023