கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று (27.09.2024) அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவேளையில் இந்த மூன்று ஏடிஎம்மில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். மையத்திற்கு முகமூடி அணிந்து வந்திருந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் கேஸ் கட்டிங் மூலம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் 3 ஏ.டி.எம்.களில் இருப்பு இருந்த ரூ. 65 லட்சம் மதிப்பிலான பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள தடயங்களை சேகரித்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அதே சமயம் இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் ஒன்றும் சிசிடிவி கேமரா பதிவாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளையர்கள் தமிழக உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கச் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 5 ஏ.டி.எம்.களில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற மூன்று ஏடிஎம் மையங்களும் நகரின் மையப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.