மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் 2019 - 2020 ஆண்டிற்கான கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ (ஜி.இ.ஆர்) குறித்த தரவுகளும் வெளியாகியுள்ளன.
ஜி.இ.ஆர் என்பது 18-23 வயதுக்குட்பட்ட மாணவர்கள் எத்தனை பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள் என்பதைக் கணக்கிடுவதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஜி.இ.ஆர் 2019 - 20ஆம் கல்வியாண்டில் 27.1 ஆக அதிகரித்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 26.3 ஆக இருந்தது. மேலும் உயர்கல்வியில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சேருவது தெரியவந்துள்ளது. மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 26.9 ஆக உள்ள நிலையில், மாணவிகளின் மொத்த சேர்க்கை விகிதம் 27.3 ஆக உள்ளது.
தமிழ்நாட்டின் கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ 51.4% சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இது 49 சதவீதமாக இருந்தது. கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ 51.4% என்பது தேசிய சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் இலக்குகளில் ஒன்று, 2035 ஆம் ஆண்டிற்குள் கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோவை 50 சதவீதமாக அதிகரிப்பது. இந்நிலையில், தமிழ்நாடு அந்த இலக்கைத் தற்போதே தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.