Skip to main content

தென் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் விளக்கம்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Will buses operate in southern districts? - Chief Secretary Explanation

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் கனமழைக்கு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வரலாற்றில் காணாத அளவுக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பணிகளுக்காக போதுமான படகுகளை தயாராக வைத்துள்ளோம். 

மக்களின் தேவைக்கேற்ப தென் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் 96 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 61 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகங்கள் அவசர உதவியாக கேட்கும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.