பா.ஜ.க.வை புள்ளை பிடிக்கிறவன் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 116 எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சித்தராமய்யாவும் குமாரசாமியும் கூறியிருந்தார்கள். பக்கத்து மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி முதல்வர்களிடம் பாதுகாப்பு கேட்போம் என்று குமாரசாமி கூறியிருந்தார். இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று பல மாநில முதல்வர்கள் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தங்கள் மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் குதிரை பேரத்திலிருந்து எம்எல்ஏக்களை காப்பாற்றுவதே பெரிய வேலை என்று குமாரசாமி கூறியிருந்தார். அந்த அளவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் எத்தகைய தில்லாலங்கடி வேலையை செய்தேனும் எடியூரப்பாவை காப்பாற்ற பரபரக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க. மேற்கொண்டுள்ள ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அகில இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருப்பது, பா.ஜ.க.வுக்கே ஆபத்தாக முடிந்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.