ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரமானது. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதனைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் ஏதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதனால் நேற்று இரவு தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற பொதுமக்களை ஆட்சியர் அலுவலகம் செல்ல விடாமல் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
அப்போது போலீசார் மீது கல்வீசி பதில் தாக்குதல் நடத்திய போராட்டகாரர்கள் போலீசாரின் வாகனத்தையும் கவிழ்த்துப் போட்டு சேதப்படுத்தினர். போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீசாரின் தூப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து திட்டமிட்டப்படி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போராட்டகாரர்களை போலீசார் தடுக்க முயன்ற போன்ற கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.