பலத்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. சிங்கப்பூரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த தகவலை ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த டிவிட்டில் மேலும், ’’இந்த சந்திப்பை உலக அமைதிக்கான முக்கிய தருணமாக மாற்ற தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம்’’ என தெரிவித்துள்ளார்.
கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதற்கு வடகொரியாவை அழித்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் மிரட்டல் விடுத்தார். இதனால் போர் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந்நாட்டின் வேண்டுகோளை ஏற்று வடகொரிய பிரதிநிதிகள் பங்கேற்றது பெரும் திருப்பமாக அமைந்தது. அதன்பின்னர் தென் கொரிய பிரதிநிதி கள் வடகொரியா சென்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். அதன்படி ஜூன் 12ல் இரு நாட்டுத் தலைவர்களும் முதல்முறையாக சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்ப பிரச்சினைகளுக்கும், அணு ஆயுதங்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.