Skip to main content

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும்... -மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
mkstalin

 

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை  தி.மு.க. முழுமையாக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அ.தி.மு.க. அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவமணிகளின் உயிரைக் கொன்று குவித்தது  நீட் எனும் கொடுவாள். அதனால்தான், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

 

அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும் டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.கழகம் நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை தி.மு.கழகமும் வரவேற்கிறது. 

 

நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை, மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர். 

 

அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில்,  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசு பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ மணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்'' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.