முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதோடு பிரஜ்வாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.
இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் கைது செய்யப்படுவது உறுதி எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “வாய்மையே வெல்லும். தற்போது நான் பெங்களூரில் இல்லை என்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது. இது குறித்து தனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.