கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சிகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாமகவுக்கு 23 இடங்களை ஒதுக்கியது அதிமுக. தொடர்ந்து பாஜகவிடமும், தேமுதிகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. தங்களுக்கான தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் உள்ளிட்டவை குறித்து தேமுதிக அதிமுகவிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ‘நமது முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்’ என தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பதிவு போட்டிருந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாஜக, தேமுதிகவும் இந்தக் கூட்டயில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் இன்று (05.03.2021) பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் பாமகவின் மாம்பழம் சின்னம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம், பாஜகவின் தாமரை சின்னம் மட்டும்தான் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் இந்த மூன்று கட்சிகள் மட்டும்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்து வரும் நிலையில், தேமுதிக மற்றும் சில கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூட்டணிக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ‘வேண்டுமென்றே தேமுதிகவைப் புறக்கணிக்கிறார்கள். இப்போதே புறக்கணிக்கிறார்கள் என்றால், தேர்தலில் எப்படி எங்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிப்பார்கள்’ என்றும் தேமுதிகவினர் கூறுகின்றனர்.
பாமக தரப்பிடம் விசாரித்தபோது, ‘தொகுதிகள் ஒதுக்கிய கட்சி சின்னங்களை மட்டும் போட்டோம்’ என்றனர். ‘அப்படியென்றால் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுவிட்டதா?’ என்கின்றனர் தேமுதிகவினர். குழப்பத்திற்கு கூட்டணியில் உள்ள தலைமைகள் தீர்வு காண்பார்கள் என்கின்றனர் அதிமுகவினர்.