நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க, அனைத்து மத்திய அமைச்சகங்களையும் பிரதமர் அலுவலகம் கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆண்டொன்றுக்கு 2 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அவரது ஆட்சிக்காலம் நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தத் தவறியதாகவும், முந்தைய ஆட்சிக்காலங்களோடு ஒப்பிடுகையில் தலைகீழ் நிலைமையை மோடி அரசு எட்டியிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான அறிக்கையை, அனைத்து மத்திய அமைச்சகங்களும் சமர்ப்பிக்கக்கோரி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையில், ஒவ்வொரு அமைச்சகமும் எத்தனை திட்டங்கள் வகுத்திருக்கின்றன, அவற்றின்மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எத்தனை, அதன்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடைந்த பலன்கள் என அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.