தீராத கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி, தனது தற்கொலைக்கு மோடிதான் காரணம் என தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் மாவட்டம் உள்ளது. நாட்டில் வறட்சியால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கும் மாவட்டங்களில் யவத்மாலும் ஒன்று. இந்த மாவட்டத்தில் உள்ள ராஜூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் பாவ்ராவ் சாயிரே (50) எனும் விவசாயி நேற்று தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்று, அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், தூக்குக்கயிறு அறுந்துபோன நிலையில், விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த ஷங்கரை, அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த விவசாயி ஷங்கர், பருத்தி விளைச்சலுக்காக 3 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். விளைச்சலுக்கு முன்பாக பிங்க் புழுக்களால் பருத்தி விற்பனை வீழ்ச்சியடைந்த நிலையில், போதிய வருமானமின்மையால் அவர் அவதிப்பட்டுள்ளார். தனது கடன்பிரச்சனையில் இருந்து மீட்க பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்தித்தும் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால் மனஉளைச்சலைச் சந்தித்து தற்கொலை செய்துகொண்ட ஷங்கர், தனது தற்கொலைக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான் என தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இதுபோல், கடந்த செப்டம்பர் மாதம் யவத்மாலைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் தனது தற்கொலைக் கடிதத்தில் மோடியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். பிரகாஷுக்கே அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் இன்னமும் வந்துசேரவில்லை; ஷங்கர் குடும்பத்தை சாந்தப் படுத்த பொய்கூறுகிறீர்களா?’ என விவசாய அமைப்புகள் அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளன.